கனவு வீடு
நான் ஐந்தாவது படித்துக்கொண்டிருந்தேன். கூடுதல் கல்விசார் நடவடிக்கைகு எங்கள் ஆசிரியை வகுப்பில் உள்ள அனைவருக்கும் ஒரு பயிற்சி கொடுத்தார். அது, ஒரு வாரத்தில் அனைவரும் அவரவருக்குப் பிடித்த கனவு வீட்டை செய்துகொண்டு வர வேண்டும் என்பது.
வீட்டிற்கு வந்து எனது கனவு வீட்டைப்பற்றி சிந்திக்க தொடங்கினேன். அது சிறியதாகவும் எளியதாகவும்தான் இருந்தது. அதைப்பற்றிய யோசனையிலும் அதற்குத் தேவையான பொருட்களை வாங்குவதிலும் வேலையை தொடங்கவே நாலைந்து நாட்கள் ஓடிவிட்டது. வார இறுதியில்தான் வேலையை தொடங்கினேன். சார்ட் பேப்பர், அட்டை, ஸ்கெட்ச், துடப்பஙக்குச்சி இவைகளின் துணை கொண்டு என் வீட்டை கட்டி முடித்தேன்.
திங்கள் காலை என் வீட்டை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றேன். வகுப்பு மாணவர்கள் அனைவரும் அவரவர்கள் செய்த வீட்டுடன் வந்திருந்தனர்.
மற்றவர்களின் வீடுகளை பார்த்து அசந்துவிட்டேன்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அசத்தியிருந்தார்கள். ஒருவன் அழகான ஓட்டு வீடு கட்டி இருந்தான். ஒருவன் இரண்டடுக்கு மாடி வீடு கட்டியிருந்தான். ஒருவன் ஓரடுக்கு வீடுதான், ஆனால் மிகவும் விஸ்தாரமாக காம்பவுண்டெல்லாம் வைத்து கட்டியிருந்தான். உள்ளே கிணறு செடிகள் மாடு என்று அனைத்தும் வைத்திருந்தான். இப்படி ஒவ்வொருத்தரும் அவரவர் கனவு வீட்டை ஆசையுடன் கட்டி எடுத்துவந்திருந்தனர். அந்த வீடுகளுக்கு முன் என் விட்டை காட்டுவதற்க்கு கொஞ்சம் கூச்சமாகத்தான் இருந்தது. ஆனால் எனக்கும் கீழே இரண்டு மூன்று பேர் இருந்தனர், அவர்கள் கடமைக்கென செய்துகொண்டு வந்திருந்தனர். அவரவர் வீட்டைப்பற்றியும் அதில் இருக்கும் அறைகள் பற்றியும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். எந்த பாடத்திலும் கவனம் செல்லவில்லை. ஒரே வீடு ஞாபகமாகவே இருந்தது. இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றியது.
அந்த பாடத்திற்கான ஆசிரியை வந்தார், அனைத்து வீடுகளையும் பார்வையிட்டார். பலரது வீடுகளை பாராட்டினார். எனது வீட்டை பார்த்த அவரது முகத்தில் எந்த மாறுதலும் இல்லை. மோசமாக செய்திருந்த மாணவர்களுக்கு திட்டு விழுந்தது. வகுப்பு முடிந்ததும் அனைத்து வீடுகளையும் ஆசிரியர்கள் அறைக்கு எடுத்து வந்து வைக்கச் சொன்னார். அங்கு அலமாரியில் அனைத்து வீடுகளும் ஒடிக்கி வைக்கப்பட்டது.
அதற்குப்பின் எங்கள் வீடுகளை நாங்கள் அவ்வளவாக பார்க்கவில்லை. எப்பொழுதாவுது வகுப்பு நோட்டு புத்தகங்களை வைக்க எடுக்க செல்லும் பொழுது அலமாரி திறந்திருந்தால் எட்டி உள்ளே பார்ப்போம். வீடுகள் எல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டிருந்தன. பின் ஒரு நாள் பார்க்கையில் எங்கள் வீடுகள் அனைத்தும் இடிந்து ஒன்றன் மேல் ஒன்றாக சரிந்து கிடந்தது. பார்ப்பதற்க்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அடுத்த வகுப்பிற்க்கு சென்றபின் வீடுகள் என்னவாயிற்று என்றே தெரியவில்லை.
இன்றும் நண்பர்களுடனோ என் குடும்பத்தினருடனோ வீடு கட்டுவது பற்றியோ வாங்குவது பற்றியோ பேசுகையில் நான் முதலில் கட்டிய அந்த வீடு மனதிற்குள் ஒரு நொடி வந்துவிட்டு செல்கிறது.
No comments:
Post a Comment